அக்டோபர் மாதத்தில் இந்தியப் பொதுத் துறை வங்கிகள் ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வாராக் கடன் பிரச்சினைகளாலும் நிதி மோசடிகளாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்திய வங்கிகள் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும், சிறு நிறுவனங்களுக்கும்கூடக் கடன் வழங்கத் தயங்குகின்றன. இதனால் பொதுமக்களும் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்குக் கடனுதவிகள் போதிய அளவில் கிடைக்கும் விதமாக அரசு தரப்பிலிருந்து கடனுதவித் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
நாட்டிலுள்ள 226 மாவட்டங்களில் முதற்கட்டமாகவும், 148 மாவட்டங்களில் இரண்டாம் கட்டமாகவும் வாடிக்கையாளர்களைத் தேடிச் சென்று கடன் வழங்கும் இத்திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திட்டத்தின் கீழ் முகாம்கள் அமைத்து கடன் வழங்குவது, வங்கிக் கணக்குகள் இல்லாதோருக்குக் கணக்குகள் தொடங்கி கடன் வழங்குவது என அதிக வாடிக்கையாளர்களுக்குக் கடன்கள் வாரி வழங்கப்பட்டன
அக்டோபர் மாதத்தில் மட்டும் இத்திட்டத்தின் கீழ் பொதுத் துறை வங்கிகள் ரூ.2.53 லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளதாக மத்திய நிதிச் சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய காலக் கடன்களாக ரூ.1.1 லட்சம் கோடியும், புதிய மூலதனக் கடன்களாக ரூ.46,800 கோடியும் வழங்கப்பட்டுள்ளன. வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரூ.19,627 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1 முதல் 9 வரையில் நடைபெற்ற முதற்கட்ட கடன் வழங்கும் திட்டத்தில் மொத்தம் 81,695 பேருக்கும், அக்டோபர் 6 முதல் 31 வரையிலான தேதிகளில் 1,70,893 பேருக்கும் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட கடன் திட்டத்தில் வீட்டுக் கடனாக ரூ.2,688 கோடியும், வாகனக் கடனாக ரூ.1,638 கோடியும், கல்விக் கடனாக ரூ.152 கோடியும், தனிநபர் கடனாக ரூ.3,503 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
சிறு நிறுவனங்கள் துறைக்கு ரூ.13,956 கோடியும், வேளாண் துறைக்கு ரூ.13,956 கோடியும், கார்பரேட் துறைக்கு ரூ.46,224 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கடன் வழங்கும் திட்டத்தில் வீட்டுக் கடனாக ரூ.9,478 கோடியும், வாகனக் கடனாக ரூ.5,447 கோடியும், கல்விக் கடனாக ரூ.273 கோடியும், தனிநபர் கடனாக ரூ.11,747 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
சிறு நிறுவனங்கள் துறைக்கு ரூ.23,254 கோடியும், வேளாண் துறைக்கு ரூ.29,053 கோடியும், கார்பரேட் துறைக்கு ரூ.76,561 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.